மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு

மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு
Tight Police security in Chennai Marina Beach

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர்.

மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் பரவின. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் கூட்டமாக வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகம் முதல் அண்ணா சமாதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ரோடு உள்ளிட்ட கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாரி முனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tight Police security in Chennai Marina Beach