தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டங்கள்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மா பேட்டையில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதிக்கும் ஷேல் கியாஸ், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் முதலில் கேரளாவில்தான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்கு கேரள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளனர்.
இதேபோல் நியூட்ரீனா திட்டத்தை வட மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர்.
பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வறட்சியால் தமிழகத்தின் வானிலை மாறிவிடும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 9 பேரை கொண்ட ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு தடையாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.