வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம பாசனக்கால்வாய் திட்டத்திற்கு ஆண்டுதோறும் பருவக்காலத்தில் நீர்திறக்க அரசாணை வெளியிட வேண்டும். - சீமான் வலியுறுத்தல்

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம பாசனக்கால்வாய் திட்டத்திற்கு ஆண்டுதோறும் பருவக்காலத்தில் நீர்திறக்க அரசாணை வெளியிட வேண்டும். - சீமான் வலியுறுத்தல்
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம பாசனக்கால்வாய் திட்டத்திற்கு ஆண்டுதோறும் பருவக்காலத்தில் நீர்திறக்க அரசாணை வெளியிட வேண்டும். - சீமான் வலியுறுத்தல்

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம பாசனக்கால்வாய் திட்டத்திற்கு ஆண்டுதோறும் பருவக்காலத்தில் நீர்திறக்க அரசாணை வெளியிட வேண்டும்.

- சீமான் வலியுறுத்தல்

 

உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம பாசனக்கால்வாய் திட்டத்திற்கு, வைகை அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படாததால், பலகோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட அக்கால்வாய் திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் செய்தி பெருங்கவலையைத் தருகிறது.

 

உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 30 கண்மாய்கள் மற்றும் 5 கசிவுநீர் குட்டைகளை நீர்த்தேக்கப்பகுதிகளாகக் கொண்டு, வைகை அணையிலிருந்து அவற்றிற்கு நீரினைப்பெறும் வகையில், ‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு அன்றைய அரசால் உருவாக்கப்பட்டது. 110 கிராமங்களிலுள்ள ஏறத்தாழ 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கால்வாய் திட்டத்தின் மூலம் விளைநிலங்களின் பாசன வசதி நிறைவு செய்யப்படுவதோடு மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள மக்களின் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால், திட்டமிட்டப்படி கால்வாய் வெட்டி முடிக்கப்படாதக் காரணத்தினால், கடந்த பல ஆண்டுகளாக உசிலம்பட்டி பகுதி விவசாயிகள், அத்திட்டத்தின் பயனை அடைய முடியாச் சூழலில் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டனர். இதனால், வேறுவழியற்ற நிலையில் அம்மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டங்களையும், பரப்புரைகளையும் முன்னெடுத்தனர். அதன் விளைவாக, கால் நூற்றாண்டு கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கால்வாய் முழுமையாகத் தோண்டப்பட்டுத் திட்டம் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், திட்டம் நிறைவேற்றப்பட்டப்பிறகும்கூட, பாசனத்தேவையை நிறைவுசெய்யும் வகையில் வைகை அணையிலிருந்து அரசால் நீர் திறந்துவிடப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க அரசின் அலட்சியப்போக்காலும், அக்கறையில்லாத நிர்வாக முறையாலும் மக்களுக்கு இழைக்கப்பட்டப் பச்சைத்துரோகமாகும். 

அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பினால் மட்டுமே உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாயில் நீர் திறக்கப்படும் எனக்கூறி நீர்வளத்துறை அதிகாரிகள் கைவிரிப்பதால், உழவுப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 1958 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசரது ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டப்பிறகு, கடந்த 62 ஆண்டுகளில் 26 முறை மட்டுமே அணை நிரம்பியுள்ளதால், அணை நிரம்பும்போதுதான் உசிலம்பட்டி கால்வாயில் நீர் திறக்கப்படும் என்பது நடைமுறை செயல்பாட்டுக்கு எதிரானது மட்டுமின்றி, விவசாயிகளைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் கொடுஞ்செயலாகும். 

 

ஆகவே, இனியும் காலந்தாமதிக்காமல் உசிலம்பட்டி பகுதி மக்களின் பாசனத்தேவையை நிறைவேற்றும் விதமாக, ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு உரியப் பருவக்காலத்தில் ஆண்டுதோறும் நீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அதிகளவில் நீரினை சேமித்துவைக்கும் விதமாகக் கால்வாய் மற்றும் கண்மாய்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

செந்தமிழன் சீமான் 

தலைமை ஒருங்கிணைப்பாளர் 

நாம் தமிழர் கட்சி