பன்றிக் காய்ச்சல் - தமிழக அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கை

பன்றிக் காய்ச்சல் - தமிழக அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கை

பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் மாத்திரைகள் 2 லட்சம் தடுப்பூசி தயார் - ராதா கிருஷ்ணன் பேட்டி.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு: 

நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்குவை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் குடி தண்ணீரை சேகரித்து வைக்கும் போது அதனை மூடி வைக்க வேண்டும், மொட்டை மாடி மற்றும், காலி மனைகளில் தேங்கும் மழைநீரில் இருந்து டெங்கு கொசு உருவாகிறது.

திருமண மண்டபம், ஒட்டல், மருந்துக்கடை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள சங்கத்தினர், பள்ளி கல்லூரிகளின் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து டெங்கு கொசுக்களை அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பைகழிவுகள் தேங்கி இருப்பதை அகற்றி பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு ஆகியவற்றை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் தினமும் 5 பேர் முதல் 20 பேருக்கு உறுதி அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சலை பொறுத்த வரையில் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவினாலே பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பொது இடங்களுக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக கை கழுவினால் வைரஸ் தொற்று ஏற்படாது.

பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19 லட்சம் "டாமி புளூ" மாத்திரைகள் தயாராக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவர்கள் கூட தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட துணை இயக்குனரை அணுகி மாத்திரைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.   

இதுவரை, 11 ஆயிரம் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளன. மேலும் 33 ஆயிரம் கவச உடைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு முகமூடி 3-1/2 லட்சம் இருப்பு உள்ளன.

மேலும் திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் 5 சதவீதம் "லைசால்" பயன்படுத்தி அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கி உள்ளோம்.

48 மணிநேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் எவ்வித உயிர் இழப்பும் ஏற்படாது. தனியாக மருந்துகள் வாங்கி சாப்பிடக்கூடாது, டாக்டரை அணுகவேண்டும், டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடையவேண்டாம்.

பன்றிக்காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீர்:

பன்றி காய்ச்சலை கபசுரக் குடிநீர் என்ற சித்த மருந்து குணப்படுத்தும். ஆடா தொடை, அக்ரகாரம், கற்பூர வள்ளி, திப்பிலி, சீந்தில் கொடி, கோரைக் கிழங்கு, சிறுதேக்கு, கோஸ்டம், நிலவேம்பு, கடுக்காய்த்தோல், லவங்கம், முள்ளி, வட்டத் திருப்பி, சுக்கு, சிருகாஞ்சொறு ஆகிய 15 வகை மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது, 5 கிராம் கபசுரக் குடிநீர் சூரணத்தை 200 மி.மீ. தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மி.லி யாக சுருக்கி காலை, மாலை அருந்தினால் பன்றிகாய்ச்சல் குணமாகும்.