மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

யிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.

இந்த ஆண்டு கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜை முடிந்ததும் பவழக்கால் விமானம் மூலம் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு பகல், இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூன்று நாயன்மார்கள் விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலேயே குவியத் தொடங்கினர். மாலையில 63 நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் திரும்பிய பக்கமெல்லாம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பழங்கள், மோர், உணவுப்பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை பலரும் பக்தர்களுக்கு வழங்கினர். அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீதியுலாவை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மக்கள் வெள்ளதால் அலைமோதியது. குற்றச்சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, நாளை( 25ம் தேதி) திருக்கல்யாண உற்சவமும் தொடங்கி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.