நாகையில் சுருக்குமடி வலைப் பிரச்சனை- சீமான் கோரிக்கை

நாகையில் சுருக்குமடி வலைப் பிரச்சனை- சீமான் கோரிக்கை
நாகையில் சுருக்குமடி வலைப் பிரச்சனை- சீமான் கோரிக்கை

நாகையில் சுருக்குமடி வலைப் பிரச்சனை- சீமான் கோரிக்கை

 

நாகை சுருக்குமடி வலைப்பிரச்சனை மோதலைத் தீருங்கள்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை!

 

நாகையில் சுருக்குமடி வலைப் பிரச்சனை! மீனவர்களைக் காக்க சீமான் வலியுறுத்தல்!

 

 

சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக, நாகை மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் போக்கும், நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

 

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒட்டுமொத்தக் கடல் மீன்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க வழிவகை செய்து, கடல் வேளாண்மையிலிருந்து மீனவப்பெருங்குடிகளை முற்றுமுழுதாக வெளியேற்றம் செய்யும் சதிச்செயலை திட்டமிட்டு செய்துவருகிறது. 

 

அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் மீன்வள மசோதாவைக் கொண்டு வந்து அதனை அவசரகதியில் நிறைவேற்றத் துடிக்கிறது. 

 இக்கொடுஞ்சூழலில், அதற்கெதிராக மீனவ மக்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டியது அவசியம். 

 

கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்ய வேண்டிய இன்றியமையாததேவையாயிருக்கையில், அதனைச் செய்யாது சுருக்குமடி வலை பயன்பாட்டினால் விளைந்த கருத்து வேற்றுமையில் சிக்குண்டு, 

 

இரு அணியாய் பிளந்து நாகை மீனவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் துயர்மிகு செய்தியறிந்து பெரும் கவலையடைந்தேன்.

 

 எத்தகைய சிக்கலையும் தீர்த்திட பேச்சு வார்த்தையையும், சனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளையும் பின்பற்றுவதுதான் உகந்ததாக இருக்கும். 

 

அதை விடுத்து, ஒருவரையொருவர் தாக்கும் வன்முறைப்பாதையைத் தேர்வு செய்வது நம்மை நாமே வீழ்த்திவிடும் ஆபத்தாகிவிடும்; 

 

பிரித்தாளும் சூழ்ச்சி எனும் உட்பகை வளர்க்கும் ஆயுதம் கொண்டே வரலாறு நெடுகிலும் தமிழர்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றனர். 

 

 அது போன்றதொரு சூழ்ச்சி நம் நாகை மீனவ மக்கள் மத்தியில் ஏவிவிடப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. 

 

 நமக்குள்ளே நாம் பிரிந்து மோதிக்கொள்ளும் விரும்பத்தகாத நிகழ்வுகள் வேதனையளிக்கிறது.

 

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த நம்பியார் நகர், பூம்புகார், திருமுல்லைவாசல் ஆகிய கிராம மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையைக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,

 

 தரங்கம்பாடி, வானகிரி போன்ற பத்திற்கும் மேலான கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று அவர்களைத் தடுக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கிடையேயும் கடும் மோதல் நிகழ்ந்திருப்பது மீனவர்களின் ஒற்றுமை பற்றிய பெரும் அச்சம் ஏற்படுகிறது. 

 

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்கியும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொலைவெறிச் செயலில் ஈடுபடும் சிங்களப் பேரினவாத அரசின் தொடர் அத்துமீறல்களையும், கொடும் வதைகளையும் எதிர்த்துக் களம் காண்கையில்...

 

உள்நாட்டு மீனவர்களிடையே உருவாகியிருக்கும் பூசலும், பிளவும் நம்மைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் பெருங்கொடுமையாகும்.

 

 மீனவர்களிடையே எழுந்திருக்கும் இத்தகைய குழு மனப்பான்மையும், இரட்டை நிலைப்பாடும் பெரும் வன்முறையாக மாறக்கூடுமென்பதால், நாகை மீனவ கிராம மக்கள் அதிக கலக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, சுருக்குமடி வலையின் பயன்பாடு குறித்தான நாகை மீனவர்களின் கருத்து வேற்றுமையைக் களைந்து, அவர்களை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். 

 மீனவர்களிடையேயான பிளவைச் சரிசெய்து இணக்கமானப் போக்கை உருவாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

-செந்தமிழன் சீமான் 

தலைமை ஒருங்கிணைப்பாளர் 

நாம் தமிழர் கட்சி