SRM பல்கலைக்கழகத்தில் சேவைத் திருநாள் – 2017
SRM பல்கலைக்கழக நிறுவனர் – வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தரின் பிறந்தநாளை சேவைத் திருநாளாக அப் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் கொண்டாடியது. அதில் பல சேவைப் பணிகள் நடத்தப்பட்டன. மறைமலை நகர், அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர் அனைவருக்கும் மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டன. பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப் பள்ளிக்கு உதவும் வகையில் தளவாடப் பொருள்களும் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் கற்றல் துணைக் கருவிகளும் வழங்கப்பட்டன.
காட்டாங்குளத்தூர், பல்கலைக்கழக வளாகத்தில் வேந்தர் பிறந்தநாளான 24.08.2017 அன்று, இரத்த தானம், கண் தான முகாம்கள் நடத்தப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக் கொடை வழங்கியதோடு, கண் தானம் செய்வதற்குப் பதிவும் செய்தனர். விழாவில் ‘‘சாதனைச் செம்மலின் சரித்திர வசந்தம்’’ என்ற வேந்தரின் சிறப்பு பற்றிய கவிதை நூல் வெளியிடப்பட்டது. தமிழ்ப்பேராயத்தின் சார்பில் பல்வேறு பட்டய மற்றும் சான்றிதழ் வகுப்புகளையும் வேந்தர் தொடங்கி வைத்தார்.
விழாவிற்குத் தமிழ்ப்பேராயத் தலைவரும் இணைத் துணைவேந்தருமான முனைவர் தி.பொ.கணேசன் தலைமையேற்றார். பதிவாளர் முனைவர் நா.சேதுராமன், தேர்வாணையர் முனைவர் பொன்னுசாமி, மருத்துவ இயக்குநர், அனைத்து இயக்குநர்கள், புலத்தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பல பேராசிரியர்களும் பெரும் அளவில் மாணவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவ – மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்ப்பேராயமும், பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றமும் இணைந்து செய்தன.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-26-08-17]