எஸ்.ஆர்.எம். சிறப்புப் பட்டமளிப்பு விழா: திரு. வெங்கையா நாயுடு

எஸ்.ஆர்.எம். சிறப்புப் பட்டமளிப்பு விழா: திரு. வெங்கையா நாயுடு
SRM Special Convocation function Vice President Venkaiah Naidu as chief guest

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 13 ஆவது சிறப்புப் பட்டமளிப்பு விழா 23/11/2017 அன்று தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பட்டமளிப்பு விழாச் சிறப்புரையில் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் “நம் கலாச்சார வேரினை, நம் தாய்மொழியினை எல்லாம் மறக்காமல் ஈடுபடும் வளர்ச்சியினை நோக்கி பயணிக்கும் ஒரு முழுமையான கல்வியினை நாம் அளிக்க வேண்டும். தார்மீக சிந்தனையற்ற வெறும் அறிவியல் மட்டும் படிப்பதுதான் இன்று எங்கும் பரவி உள்ளது. அப்படியல்லாத பன்முகப்பட்ட தன்மை கொண்ட கல்வி நம்மைச் செதுக்க வேண்டும். பழமையும் புதுமையும் இணைந்த சிந்தனை கொண்ட நன் மக்களை உருவாக்க பேராசிரியர்கள் பாடுபடவேண்டும். அதற்கு அவர்கள் அன்றாடம் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு சாதாராண விவசாயி மகனான நான் இன்று துணை குடியரசுத் தலைவர் ஆகி இருக்கிறேன் என்றால் நம் நாட்டில் பாகுபாடு, பாரபட்சம் என்றும் இருந்தது இல்லை. முயன்றால் இங்கு எவருக்கும் வாய்ப்பு உண்டு என்பதே காரணம். பெண்கல்வியில் இன்று தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்றால் பெண்களைப் போற்றும் தன்மை நம் கலாச்சாரமே என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த தமது கல்விப்பணியின் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தலைசிறந்த தலைமுறையை உருவாக்கிக்கொண்டு வருகிறது” என்று தமது சிறப்புரையில் கூறினார். இவ்விழாவில் கெளரவ விருந்தினர்களாகத் தமிழகத்தின் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பொறியியல் மற்றும் தகவல்தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல், அறிவியல் மற்றும் கலையியல் மற்றும் மேலாண்மையியல் முதலிய புலங்களில் பட்டவகுப்பு, முதுநிலைபட்டவகுப்பு, முனைவர் பட்ட ஆய்வு, சான்றிதழ்ப் படிப்பு பயின்ற ஏறத்தாழ 6000 மாணவர்கள் பட்டம்பெற்றனர். இது தவிர தத்தம் துறைகளில் சிறப்புத்தகுதி உடைய 185 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் தமிழகத்தின் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, தமது உரையில் “இந்தப் பட்டமளிப்பு விழாவானது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். "இன்று தமிழகம் கல்வியில் தனித்தும் முதன்மையானதாகவும் திகழ்வதற்குக் காரணம் உயர்கல்வியின் நேர்த்தியும் தனித்துவமுமே ஆகும்." என்றும் பல்கலைக்கழகம் என்பது அறிவு மட்டும் வழங்குவது கிடையாது, ஆராய்ச்சித்திறத்தோடு கூடிய அறிவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்குவதாகவும் முன்வைத்தார். தமிழகத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே. பி. அன்பழகன் கலந்துகொண்டு தமது உரையில்“ தமிழகம் உயர்கல்வித்துறையில் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகிறது என்பதை பலநிலைகளில் பட்டியலிட்டுக் கூறினார். இந்த வளர்ச்சிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார் ”. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறையில் ஆற்றிவரும் பணிகளையும் பாராட்டிக் கூறினார்.

எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமங்களின் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் தமது வரவேற்புரையில் துணை குடியரசுத்தலைவரை வரவேற்றுப் பேசும் போது “நீங்கள் தென் இந்தியாவின் பெருமை, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை என்று குறிப்பிட்டதோடு விவசாயக்குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பின் மூலமாகவும், நேர்த்தியான குணங்களோடும் இந்த நிலையை அடைந்துள்ளீர்கள். நீங்கள் தனித்துவமானவர். உங்களின் பேச்சு, அடுக்குமொழி, அறநெறி, அர்ப்பணிப்பு, தேசபக்தி அனைத்துமே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை என்று கூறி வரவேற்றார். மேலும்” கல்விநிலையங்களுக்கு தகுதி வழங்கும் சர்வதேச தரநிர்ணய நிறுவனமான QS (Quacquarelli Symonds Limited) நான்கு நட்சத்திர விருதினை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. உலகம் முழுவதும் 50 பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் இரண்டு பல்கலைக்கழகங்களும் இந்தத் தரவிருதினைப் பெற்றுள்ளன. அதில் நமது பல்கலைக்கழகமும் ஒன்று என்று வேந்தர் அவர்கள் பெருமையோடு கூறினார்.

பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாகிகள் கலந்துகொள்ள விழா இனிதே நிறைவடைந்தது.

SRM Special Convocation function Vice President Venkaiah Naidu as chief guest