விவசாயிகளின் கடன் ரத்து: ராகுல் பாராட்டு

விவசாயிகளின் கடன் ரத்து: ராகுல் பாராட்டு
Rahul Gandhi hails yogi adithyanaths farm loan waiver

புது டெல்லி: உத்திர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது, முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பிறகு சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் வாராக்கடன் தொகையான ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்வதாக ஆதித்யநாத் அறிவித்தார்.

உ.பி. மாநிலத்தில் மொத்தம் உள்ள 2.30 கோடி விவசாயிகளில், 2.15 கோடி பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விவசாயிகளின் கடன் ரூ.36,359 தள்ளுபடி செய்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விவசாயிகளுக்கு உ.பி. அரசு செய்துள்ள இந்த சலுகை சிறு பகுதியிலான நிவாரணம்தான் என்றாலும் சரியான பாதையில் செல்லும் ஒரு முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு, குறு விவசாயிகளின் கடன் தொகை 36,359 கோடியை தள்ளுபடி செய்ததன் மூலம் விவசாயிகளின் மூலாதார பிரச்சனையை அறிந்துகொள்ள பா.ஜ.க. அரசு முன்வந்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

"ஆனால், நாடு முழுவதும் அவதிப்படும் விவசாயிகளுடன் நாம் அரசியல் விளையாட்டில் ஈடுபட கூடாது. மாநிலங்களுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல் பரவலாக நாடு முழுவதும் பேரிடருக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளிடம் பிரச்சனைகளை தீர்க்க பரவலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rahul Gandhi hails yogi adithyanaths farm loan waiver