பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்

பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்
Public exam pattern change in Tamil Nadu

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொதுத்தேர்வு முறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து அவர் கூறியதாவது:

2018ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத் திட்டங்கள் மாற்றப்படும். 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்பு பதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

பிளஸ் 2 வகுப்பில் தற்போது இருக்கும் 1200 மதிப்பெண் என்ற நடைமுறையை 600 மதிப்பெண்ணாக குறைத்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. அதாவது பிளஸ் 1 வகுப்பில் 600 மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 600 மதிப்பெண் என பிரித்து வழங்கப்படும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் எழுத்துத் தேர்வு 90 மதிப்பெண்கள், அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் என தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும். தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்படும்.

கல்லூரியைப் போல இடையில் தேர்வு எழுதலாம். 11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள். 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களுக்கு, ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம்.

மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சியும், சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சியும் வழங்கப்படும்.

சிறந்த மாணவர்களை உருவாக்கவே பொதுத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ.-க்கு இணையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி அறிஞர்களைக் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Public exam pattern change in Tamil Nadu