காவலாளி கொலை: முக்கிய குற்றவாளி கார்விபத்தில் பலி

காவலாளி கொலை: முக்கிய குற்றவாளி கார்விபத்தில் பலி
Prime accused in Kodanad estate dead

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. அங்குள்ள சொகுசு பங்களாவில் தான் மறைந்த ஜெயலலிதா ஒய்வு எடுத்து வந்தார். இந்த சொகுசு பங்களாவில் நேபாளத்தை சேர்ந்த ஓம் பகதூர், வடமாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஓம் பகதூர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரையும் தாக்கிய அந்த மர்ம நபர்கள், ஜெயலலிதா தங்கும் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த தங்க, வைர நகைகள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், கம்ப்யூட்டரில் சில ஆவணங்களை எடுத்து சென்று உள்ளனர்.

முதலில் போலீசாருக்கு உயிர்தப்பிய காவலாளி கிருஷ்ணபகதூர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பங்களாவில் படிந்திருந்த ரத்தமாதிரியுடன் ஒப்பிடப்பட்டது. இதில் இரண்டும் வெவ்வேறு வகையான ரத்தம் என்று தெரியவந்தது. பின்னர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ்(36) என்பவர் தான் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என போலீசாருக்கு தெரிய வந்தது.

கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் கொடநாடுக்கு வந்துள்ளார். அந்த வகையில் கொடநாடு பங்களா பற்றிய முழு விவரங்களும் இவருக்கு அத்துபடியாக இருந்தது. இந்த நிலையில் கனகராஜ் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொடநாட்டில் உள்ள அவரது சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார் கனகராஜ். இந்த திட்டத்திற்கு அவரது நண்பரான சயன் என்பவர் உதவி உள்ளார். சயனுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் ஆகும்.

கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தை சயன் கேரளாவில் உள்ள கூலிப்படை உதவியுடன் அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து கனகராஜ், சயன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட கனகராஜ் நேற்றிரவு கார் விபத்தில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்த கனகராஜ் அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனகராஜின் நண்பரும் இந்த வழக்கின் மற்றொரு நபரான சயன் என்பவரும் இன்று காலை கார் விபத்தில் சிக்கியுள்ளார். பாலக்காடு பகுதியில் காரில் சென்றபோது இவரது கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. இவருடன் சென்ற 2 குழந்தைகள் இறந்துள்ளனர். சயன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Prime accused in Kodanad estate dead