கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியுள்ளது: பிரதமர் மோடி
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 100-ஆவது ஆண்டு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துக்கொண்டிருந்தது. பின்னர் பாஜக அரசு பொறுப்பேற்றதும் நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பல சீர்திருத்த ஒழுங்கு நடவடிக்கைளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பல கோரிக்கைகள் கண்டறியப்பட்டு அதனை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.
வர்த்தகத்துறையின் பலதரப்பட்ட அமைப்புகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொருளாதார ஏற்றத்துக்காக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதிய கொள்கை முடிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவை அனைத்தும் பகலிரவு பார்க்காமல் கடினமாக உழைத்ததன் பிரதிபலிப்பு தான் உலகளவில் தொழில் தொடங்க சுலபமான நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டுவருவதற்காக, முறைப்படுத்தப்பட்ட வரி நிர்வாகத்தை நோக்கி நாம் கடந்து வருகிறோம். வங்கி மற்றும் தனியார் துறையில் தொடர்புடையவர்களில் முன்பிருந்த பொருளாதார வீக்கம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது என்று உறுதியளிக்கிறேன். எனவே அனைவரும் முதலீடு செய்வதிலும், செலவு செய்வதிலும் எவ்வித தயக்கமும் இன்றி தைரியமாக முடிவெடுக்கலாம்.
எஃப்டிஐ என்பதை இரண்டாக விளக்க விரும்புகிறேன். அதில் முதலாவது நாம் அனைவரும் அறிந்த அந்நிய நேரடி முதலீடு, மற்றொன்று நாட்டின் முன்னேற்றம். இவை இரண்டிலும் சமீபத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. எனவே 5 டிரில்லியன் பொருளாதாரம் என்பது சாத்தியமானது தான் என்று தெரிவித்தார்.