டெல்டா மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி
நாகப்பட்டினம் / மயிலாடுதுறை / காரைக்கால் / திருவாரூர் / தஞ்சாவூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் இளம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
நாகை நம்பியார் நகரில் கனமழையால் ஒரு கான்கிரீட் வீட்டில் ஒரு பகுதி சேதமடைந்தது. நாகை மேட்டு பங்களா தெருவில் ஒரு மின் கம்பமும், நாகை நீலா மேல வீதியில் ஒரு மரமும் சாய்ந்தன. மேலும், நாகைநீலாயதாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): நாகை 146, திட்டச்சேரி 112.20, வேளாங்கண்ணி 165.70, திருக்குவளை 51.10, தலைஞாயிறு 101.80, வேதாரண்யம் 112.60, கோடியக்கரை 103.20. இதற்கிடையே, நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்ஆய்வு செய்தார்.
அப்போது, வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04365 251992 ஆகிய எண்களிலும், வாட்ஸ் அப் மூலம் 8438669800 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார். நாகை ஒன்றியம் செல்லூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரி நேற்று பார்வையிட்டார்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மயிலாடுதுறையில் இருந்து மணல் மேடு செல்லும் சாலையில் பல்லவராயன்பேட்டையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் சேதமடைந்தன. இதனால், ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை நகராட்சி மூலம் வெளியேற்றும் பணிகளை ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மயிலாடுதுறை 137.1, செம்பனார்கோவில் 133.4, மணல் மேடு 88, சீர்காழி 141, கொள்ளிடம் 125.8, பொறையாறு 131.2.
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகரம், திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியுள்ள விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் ஆட்சியர் அ.குலோத்துங்கன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ ஏ.எம்.எச்.நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ எம்.நாக தியாகராஜன் ஆகியோர் மழைநீர் தேங்கியிருந்ததை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 140.9 மி.மீ மழை பதிவாகியிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழை காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): திருவாரூர் 74, நன்னிலம் 66, குடவாசல் 61, வலங்கைமான் 38, மன்னார்குடி 50, நீடாமங்கலம் 58, திருத்துறைப் பூண்டி 62, முத்துப் பேட்டை 15.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் ராஜராஜ சோழன் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ஒரு மரம் அடியுடன் பெயர்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழை நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): அணைக்கரை 58.80, கும்பகோணம் 31, பாபநாசம் 30, தஞ்சாவூர் 27, மதுக்கூர் 25, திருவையாறு 23, பட்டுக்கோட்டை 22.50, திருவிடை மருதூர் 20. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.