இரு அணிகளும் இணைந்து செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை

இரு அணிகளும் இணைந்து செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை
No objection to join with sasikala faction says OPS

பெரியகுளம்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட தொடங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரு அணிகளும் தங்களுடைய வேட்பாளர்களை களத்தில் நிறுத்தினர்.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தனர். மேலும் இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாக உள்ள ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கினர்.

இருதரப்பு ஆவணங்களையும் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்கியது, மேலும் இரு அணியினருக்கும் சுயேட்சை சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்கியது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி விடக்கூடாது. கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சிக்குவது சரியல்ல.

இரு அணிகளும் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. தேர்தல் ஆணையத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் அளித்துள்ளோம்.

எனவே இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும். இரு அணிகளும் இணைவது குறித்து சசிகலா அணி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்னிடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அந்த குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No objection to join with sasikala faction says OPS