பல பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஆசாமி வனப்பகுதியில் கைது

பல பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஆசாமி வனப்பகுதியில் கைது

மூணாறு: இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

இடுக்கி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், குமுளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, கோட்டயம் மாவட்டம் மேலுகாவ் பகுதியை சேர்ந்த அப்பு (வயது 24) என்பவரை காதலித்ததும், அவருடன் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அப்பு வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போன், இடுக்கி மாவட்டம் மூலமற்றம் பூஞ்சிறா வனப்பகுதியில் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் துணையுடன் போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை மூலமற்றம் வனப்பகுதியில் தொடுபுழா-புளியன்மலை மாநில நெடுஞ்சாலையில் தலையில் மூட்டைகளுடன் அப்புவும், அந்த சிறுமியும் வந்ததை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து தப்பியோடிய சிறுமியை சரம்குத்தி பகுதியில் வைத்தும், அப்புவை ஆனக்கயம் பகுதியில் வைத்தும் பொதுமக்களின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் குமுளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமுளிக்கு சுற்றுலா வந்த அப்புவுக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் கடந்த 23 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஆனால் அப்பு சிறுமியை திருமணம் செய்யாமல் வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் உணவு தயாரிக்க தேவையான பொருட்களை சாக்குமூட்டையில் கட்டிக்கொண்டு வனப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

தாங்கள் கொண்டு சென்ற உணவு பொருட்கள் தீர்ந்தவுடன் மாங்காய், இளநீர் ஆகியவற்றை குடித்து பசி தீர்த்து, வனப்பகுதியில் 23 நாட்களாக சுற்றி அலைந்துள்ளனர். பாறை இடுக்குகளிலும், மரத்தில் அடிவார பகுதியிலும் படுத்து உறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே அப்பு குறித்து போலீஸ் விசாரணை செய்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அப்பு பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை பலாத்காரம் செய்துவிட்டு கழற்றி விடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பல பெண்களை வசிகரித்து தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட கோட்டயம் சிங்கவனம் பகுதியில் இளம்பெண் ஒருவரை கடத்தி வந்து கற்பழித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளது. இதுதவிர மூலமற்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி சென்ற வழக்கும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று 23 நாட்களாக வனத்தில் தங்க வைத்ததாக அப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை தொடுபுழா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பீர்மேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அந்த சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த சிறுமி தொடுபுழாவில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.