கன்னியாகுமரி மீனவர்கள் பீதி கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

கன்னியாகுமரி  மீனவர்கள் பீதி கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
கன்னியாகுமரி மீனவர்கள் பீதி கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

கன்னியாகுமரி  மீனவர்கள் பீதி கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

 

கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர்.

கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர் என்று உள்வாங்க தொடங்கியது. இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்தது. விடிந்த பிறகுதான் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு நேற்று பகல் முழுவதும் கடல் இயல்பாக காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு கடல் 2-வது நாளாக மீண்டும் உள்வாங்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த ராட்சத பாறைகள், மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிய தொடங்கின. அத்துடன் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகள் திடல் போல் காட்சியளித்தது. இதை பார்த்த மீனவர்கள் ஒருவித அச்சத்துடனும், பீதியுடனும் காணப்பட்டனர். விடிய விடிய அதே நிலைமை நீடித்தது.

இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கன்னியாகுமரி கடல் இதுபோல் உள்வாங்கியது. தற்போதும் அதே போல் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோர மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனால், அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய விழித்திருந்தனர். பொதுவாக கன்னியாகுமரி கடல் அடிக்கடி பகல் நேரங்களில் மட்டுமே அவ்வப்போது சில அடிதூரம் மட்டுமே உள்வாங்கி வந்தது. தற்போது கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவது, மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபற்றி கன்னியாகுமரி பகுதி மீனவர்களிடம் கேட்டபோது :-

கன்னியாகுமரி பகுதியில் பகல் நேரத்தில் கடல் உள்வாங்குவதை பார்த்து இருக்கிறோம். இரவு நேரங்களில் கடல் உள்வாங்கியதை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கி இருப்பது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது, என்றனர்.

இதுகுறித்து ஜோதிட நிபுணர்கள் கூறும்போது, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம். அது பகல், இரவு என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றனர்.