ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் விடியோ போலியா?

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் விடியோ போலியா?
Is Jayalalithaa juice drinking video in Apollo is fake

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மறைவுக்கு பின்பு வெளியானது. அவ்வாறு ஜெயலலிதா ஜூஸ் குடித்தபோது இருந்ததாக கூறப்பட்ட அறையை ஆணையத்தின் வக்கீல்கள் ஆய்வு செய்தனர். அந்த அறையின் அமைப்பும், வீடியோவில் உள்ள காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு குறித்து ஆணைய வட்டாரம் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மறைவுக்கு பின்பு வெளியானது. இந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜெயலலிதா ஜூஸ் குடித்தபோது இருந்ததாக கூறப்பட்ட சாதாரண அறை ஆய்வு செய்யப்பட்டது.

ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவில் கண்ணாடி போன்ற ஜன்னல் இருப்பதும், அறையை ஒட்டி செடிகள் இருப்பதும் தெரியும். ஜெயலலிதா கண்ணாடி வழியாக வெளியே பார்க்கும்போது பசுமையாக தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கையாக செடிகளை வைத்திருந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் ஜெயலலிதா டி.வி. பார்த்துக் கொண்டே ஜூஸ் குடித்ததாக கூறப்பட்டது.

அந்த அறையின் அமைப்புப்படி பார்த்தால் ஜெயலலிதா படுத்திருந்த இடத்துக்கு எதிரே வாசல் தான் உள்ளது. அங்கு டி.வி. இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோன்று ஜன்னலும் இல்லை. வீடியோவில் இருந்த அமைப்பே அந்த அறையில் இல்லை. இதன்மூலம் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கேட்டதற்கு, தற்போது அந்த அறையை அறுவை சிகிச்சை கூடமாக (ஆபரேசன் தியேட்டர்) மாற்றி விட்டதாக அப்பல்லோ தரப்பில் கூறப்பட்டது. இது கேள்விக்குறியாக உள்ளது.

அமைச்சர்கள் இருந்ததாக கூறப்படும் அறையில் இருந்து ஜெயலலிதாவை பார்க்க முடியாது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறைக்குள் யார், யார் செல்கிறார்கள் என்பதை அமைச்சர்கள் பார்க்கலாம். அதேபோன்று ஜெயலலிதா சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழுவினருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தும் ஜெயலலிதா அறையில் என்ன நடக்கிறது? என்பதை பார்க்க முடியாது. எனவே அவர்கள், ஜெயலலிதா அறையில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்திருக்க முடியாது.

ஜெயலலிதா இருந்த தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008-ஐ பொறுத்தமட்டில் 14-க்கு 14 அடி அளவில் தான் இருந்தது. அந்த அறையில் 8 அடி அகலத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கான எந்திரம்(மெஷின்) வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் தான் ஜெயலலிதா படுத்திருந்த கட்டில் உள்ளது. அந்த அறையில் 2 பேர் மட்டுமே நிற்க முடியும். சசிகலா தங்கியிருந்தது ‘சூட் ரூம்’ எனப்படும் சொகுசு அறை ஆகும். இந்த அறை 30-க்கு 30 அடி என்ற அளவில் இருந்தது.

இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Is Jayalalithaa juice drinking video in Apollo is fake