ஜி.எஸ்.டி.யால் ஏமாற்றமே மிஞ்சியது!

ஜி.எஸ்.டி.யால் ஏமாற்றமே மிஞ்சியது!
Is GST is a Big Failure to people

புதுடெல்லி: மத்திய-மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த வரி அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் தொடங்கப்பட்ட இந்த வரியின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுவதாக அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற 4 படிநிலைகளை கொண்டது, ஜி.எஸ்.டி. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீத வரியோ அல்லது வரிவிலக்கோ அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவற்றின் விலை குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதற்கு உதாரணமாக, அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள், பால் போன்ற உணவு பொருட்களை மத்திய அரசு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், கடைகளில் அப்பொருட்களின் விலை குறைவதற்கு பதிலாக, அதிகரித்துள்ளது என்பதையே கள நிலவரம் காட்டுகிறது.

மேலும், ஜி.எஸ்.டி.யால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஒரு சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு சரிவடைந்துள்ளதாகவும் மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ரா கூறியுள்ளார். மேலும், நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டிய (ரீபண்ட்) தொகைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், ரூ2 லட்சம் கோடி ரீபண்ட் தொகையை மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சரக்கு போக்குவரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க ‘இ-வே ரசீது’ முறை கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இன்னும் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் நின்று கொண்டு பணம் பறிப்பதால், இந்த முறையை கைவிட வேண்டும் என்று டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

வீடுகள் மீது விதிக்கப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், வீடுகளின் விலை முன்பை விட அதிகரித்து விட்டதாகவும், இதனால், ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்கும் முடிவை கைவிடுவதாகவும் ‘அனராக்’ என்ற ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறுகிறார்.

Is GST is a Big Failure to people