அரசு பள்ளியில் தன் குழந்தையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!

அரசு பள்ளியில் தன் குழந்தையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!
IAS officer daughter studying in Chennai Municipal school

சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை கல்வி கற்பதற்காக, பெண் அதிகாரி ஒருவர் சேர்த்துள்ளார்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. அதற்கு மாறாக பெண் அதிகாரி ஒருவர் முன்மாதியாக தன் குழந்தையை அரசு மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளார்.

அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.

இது, குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, நிருபர்களுக்கு கூறியதாவது:-

"ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு", என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

எனது கணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா கூறியுள்ளார்.

IAS officer daughter studying in Chennai Municipal school