லலிதா, அம்ருதா, கீதா ஆகியோரை ஜெயிலுக்கு அனுப்புவேன்: புகழேந்தி

லலிதா, அம்ருதா, கீதா ஆகியோரை ஜெயிலுக்கு அனுப்புவேன்: புகழேந்தி
I will send Amrutha Geetha and Lalitha to Jail says Pugazhendhi

பெங்களூரு: தினகரன் ஆதரவாளரான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோது அடங்கி, ஒடுங்கி இருந்தவர்கள் இன்று வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா தன்னுடைய சகோதரி என்று கடந்த 12, 13 ஆண்டுகளாக கூறி வந்த சைலஜா இறந்து விட்டார். அவரது இறப்புக்கு பின் அவரது மகள் அம்ருதா தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார். ஜெயலலிதா தான் தனது தாயார் என்று அவர் கூறி வருகிறார். ஜெயலலிதாவுக்கு மகள் இருந்தது உண்மைதான் என்று அம்ருதாவின் உறவினர் லலிதா கூறி உள்ளார்.

தற்போது சென்னையில் இருந்து கீதா என்ற பெண் ஜெயலலிதாவின் தோழி என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்றும், அந்த மகள் அம்ருதா தான் என்றும் கூறி இருக்கிறார்.

என்னை பொறுத்த வரையில் ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். அரசியலில் அசைக்க முடியாத இரும்பு பெண்மணி. அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில் ஜெயிலுக்கு அனுப்புவேன். இனியும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரை பற்றி தவறாக பேசுவதை எந்த தொண்டர்களும் தாங்க மாட்டார்கள். ஆனால் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சிலர் பின்னால் இருந்து இயக்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

I will send Amrutha Geetha and Lalitha to Jail says Pugazhendhi