சரக்கு, சேவை வரி விதிப்பு: ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்வு

சரக்கு, சேவை வரி விதிப்பு: ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்வு
Food Price rise upto 18 per cent due to GST

சென்னை: நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் சரக்கு, சேவை வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சரக்கு, சேவை வரி இன்று (சனிக்கிழமை) முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் ஓட்டல்களில் சாப்பாடு உள்பட தின்பண்டங்களின் விலை உயருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

ஓட்டல் கடைகளில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக 2 சதவீதம் வாட் வரி தான் இருந்தது. இந்த வரியை மாற்றி, மத்திய அரசு சரக்கு, சேவை வரியை அமல்படுத்துகிறது. ஓட்டல்களை பொறுத்தவரையில், ஏ.சி.யுடன் உள்ள ஓட்டல்களுக்கு 18 சதவீதமும், ஏ.சி. அல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீதமும் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பாடு விலை 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பார்சல்களுக்கும் இது பொருந்தும்.

சாப்பாடு வகைகளை போலவே, இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதமும், கார வகைகளுக்கு 12 சதவீதமும் சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயரும். இதேபோல், பேக்கரி கடைகளுடன் கூடிய டீக்கடைகளில் டீ விலை 5 சதவீதம் அதிகரிக்கும்.

இதுதொடர்பாக நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை அவர் காதில் வாங்கவில்லை.

சரக்கு, சேவை வரி விதிப்புக்கு எங்கள் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதுகுறித்து பேசவில்லை. வரி விதிப்பு தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை.

ஓட்டல் கடைகளில் உற்பத்தி செய்து அதில் கிடைக்கும் லாபத்தை விட, வரி தான் அதிகமாக இருக்கிறது. இதனால் பிரச்சினை தான் வரும். ஓட்டல்களை நம்பி தமிழகத்தில் 2 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும். எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஓட்டல்களில் ஏ.சி.க்களை அகற்றிவிட உரிமையாளர்கள் அனைவரும் முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Food Price rise upto 18 per cent due to GST