ஈரோடு இடைத்தேர்தல்: வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சினத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 24 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 19-ம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் திமுக அறிவித்துள்ளது.