பணிநீக்கம் செய்ததால் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டாக்டர்..!
மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்த காரணத்தால் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு நேற்று மதியம் சுமார் 12.15 மணியளவில் ஒரு போன் கால் வந்துள்ளது. அப்போது பேசிய நபர் மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் அளித்ததையடுத்து போலீசார், மருத்துவமனையில் தேடிய போது அங்கு எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் செல்போன் எண் மூலம் வெடிகுண்டு இருப்பதாக போன்கால் செய்த நபரை கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் ஒரு டாக்டர் என்றும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் 2017-ம் ஆண்டு அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவுகள் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.