தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
Delhi police books Dinakaran in bribery case

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக இரண்டாக பிளவு பட்டது. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷினிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுகேஷ் சந்திர சேகரராவ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் ரொக்கமாக ரூ.30 லட்சம் இருந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலதித்தார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1 கோடி மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு கட்டுகள் சிக்கின. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தனக்கு தேர்தல் கமி‌ஷனில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தெரியும் என்றும் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்திருப்பதாக கூறினார். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Delhi police books Dinakaran in bribery case