ஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது: ஸ்டாலின்

ஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது: ஸ்டாலின்
DMK will surely win RK nagar constituency byelection

சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.கவின் சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார், இந்நிலையில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களையும், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:

இன்றைக்கு தமிழகம் தொழில் வளர்ச்சி, விவசாயத்தில் மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் போராட்டக் களத்தில் தான் உள்ளனர். இங்கு போராட்டம் நடத்தி பலன் இல்லாததால் டெல்லி சென்று விவசாயிகள் போராடுகிறார்கள்.

அ.தி.மு.கவின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு இந்த ஆட்சி முன் உதாரணமாக இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்ற கூடியவர் எங்கள் வேட்பாளர் மருது கணேஷ் தான். உள்ளூர் மக்களின் சிரமங்களை உணர்ந்தவர் எங்கள் வேட்பாளர். எனவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வையுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது. ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தாலும் இன்னும் இந்த தொகுதி முன்னேறவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிக்கியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சசிகலா. ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்த சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை சிக்க வைத்து விட்டனர். ஜெயலலிதாவுக்கு கெட்டபெயர் வந்ததற்கு காரணமே சசிகலா குடும்பம் தான்.

சசிகலாவின் உறவினரான டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகரில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு தான் பணப்பட்டுவாடா நடந்தாலும் தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆர்.கே.நகரில் நிச்சயம் தி.மு.க வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

DMK will surely win RK nagar constituency byelection