சமூக வலைதள கருத்துகளால் சர்ச்சை சித்த மருத்துவர் ஷர்மிகா 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜர்: பிப்.24-ல் விளக்கம் அளிப்பதாக உறுதி
சமூக வலைதளங்களில் தெரிவித்த மருத்துவக் குறிப்புகள் சர்ச்சையானதை தொடர்ந்து, தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறை இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா 2-வது முறையாக ஆஜரானார்.
சமூக வலைதளங்களில் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்குபவர் சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா. ‘ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்’ என்பது உட்பட சமீபத்தில் இவர் தெரிவித்த மருத்துவக் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
சித்த மருத்துவத்தில் இல்லாத கருத்துகளை ஷர்மிகா தெரிவிப்பதாக பலரும் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், அவரிடம் விளக்கம் கேட்டு,தமிழக அரசின் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துறை இயக்குநரகத்தில் ஷர்மிகா கடந்த மாதம் 24-ம் தேதி தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, புகார்களின் நகல்கள் அவரிடம் தரப்பட்டன. அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
பிப்.10-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டதால், துறை இயக்குநரகத்தில் அவர் நேற்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இணை இயக்குநர் பார்த்திபனிடம் கேட்டபோது, ‘‘மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடந்து வருகிறது. வரும்24-ம் தேதி எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தவிர, யூ-டியூபில் ஷர்மிகா தவறான தகவல்களை கூறுகிறார் என்றுதான் புகார்கள் வந்ததே தவிர, அவர் கூறிய தகவல்களை பின்பற்றியதால் பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் கூறவில்லை. பாதிக்கப்பட்டதாக புகார்வந்தால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர் விளக்கம் அளித்த பிறகு, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
மருத்துவர் ஷர்மிகாவின் தாய் டெய்சி, தமிழக பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கிறார். அவரும் சமூக வலைதளங்களில் பல்வேறு மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.