பரத நாட்டியக் கலைஞர்களின் சாதனை முயற்சி

பரத நாட்டியக் கலைஞர்களின் சாதனை முயற்சி
Bharatham 5000 a Guinness World Record attempt

பாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை படைக்கும் நோக்கில் மாபெரும் நிகழ்வொன்றை வேல்ஸ் பல்கலைகழகம் லஷ்மன்ஸ்ருதி மற்றும் விசாகா மீடியா உடன் இணைந்து நடத்த உள்ளது

வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை "பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக" வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.

நாட்டியக்கலைஞர் திரு. அதிர்ஷ்ட பாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட 26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் ஒன்று கூடி நடனமாட உள்ளனர்.

பரத மாமேதை நாட்டியப் பேரரசி, பத்மபூஷண் திருமதி. பத்மா சுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்க உள்ளார். மேலும் பரத நாட்டியக் கலைஞர்களும், திரைப்பட நடன இயக்குநர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் நடனமாடுவதற்கு பதிவு செய்த கலைஞருக்கு 26 நிமிடங்களுக்கான பாடலும், அப்பாடலுக்கு நடனக் கலைஞர் ஒருவர் ஆடுகின்ற ஆடல் வடிவமும் பதிவு செய்யப்பட்ட காணொளித்தட்டு (டிவிடி) வழங்கப்படும். இந்த காணொளியைப் பார்த்து பயிற்சி செய்து கலைஞர்கள் இந்நிகழ்வில் ஆடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நடனப் பள்ளி ஆசிரியர்களும், நடனப் பள்ளி இயக்குநர்களும் பல்வேறு வகையில் பணியாற்றி வருகிறார்கள்.

வெளியூரிலிருந்து வருகின்ற கலைஞர்களுக்கு தங்கும் இடவசதியும், பயிற்சி செய்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

5000 கலைஞர்கள் பங்கேற்க இருக்கும் ”கின்னஸ் உலக சாதனை” நிகழ்வென்பதாலும், 5000 கலைஞர்களின் பெற்றோர்கள், 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட நடனப்பள்ளிகளின் இயக்குநர்கள், 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பு செய்ய உள்ளதாலும் இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக்கழகம், லஷ்மன் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுவனங்கள் இரண்டு மாத காலமாக செய்து வருகின்றனர்.

இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்க விரும்பும் நடன கலைஞர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 98404 80791 / 96775 00442 / 044 – 24747206.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் பதிவு செய்ய: 98410 72593, 98947 15465

ஆன்லைனில் பதிவு செய்ய: www.lakshmansruthi.com

நிகழ்ச்சியில் உபயோகிக்கப்பட உள்ள பாடல் மற்றும் நடன அமைப்பு பற்றிய விளக்க வீடியோவை காண பின் வரும் யூ டியூப் இணைப்பை பார்வையிடவும்… https://youtu.be/gEAwQKPL6j8

Bharatham 5000 a Guinness World Record attempt