ஸ்டிரைக்: வங்கி சேவை கடுமையாக பாதிப்பு

ஸ்டிரைக்: வங்கி சேவை கடுமையாக பாதிப்பு
Bank Strike huge loss to Chennai

சென்னை: வங்கி ஊழியர்களுக்கு 2017 நவம்பர் மாதத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் கடந்த 6-ந்தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஊதிய உயர்வு திருப்திகரமாக இல்லாததால் திட்டமிட்டப்படி 2 நாள் வேலை நிறுத்தத்தை இன்று ( மே 30) தொடங்கினார்கள்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்திலும் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் தவிர அனைத்து வங்கி ஊழியர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.

10,500 வங்கி கிளைகளில் பணியாற்றக்கூடிய 45 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்றதால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, போடவோ முடியவில்லை. டெபாசிட் செய்யவும் இயலவில்லை.

காசோலை பரிவர்த்தனை, பணமாற்றம், அந்நிய செலாவணி மாற்றம் உள்ளிட்ட அனைத்து வங்கி நடவடிக்கைகளும் முடங்கின. அரசு கருவூல பணிகள், ஏற்றுமதி, இறக்குமதி பணபரிமாற்றம், கடனை திருப்பி செலுத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை தேங்கியுள்ளது.

Bank Strike huge loss to Chennai