அன்னையர் தின கொண்டாட்டம்

அன்னையர் தின கொண்டாட்டம்
Mothers of Anandam Old-Age Home

ரெயின்ட்ராப்ஸ் அன்னையர் தின கொண்டாட்டம் - முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களுக்கான பாகுபலி-2 சிறப்பு காட்சி

ரெயின்ட்ராப்ஸ் இளைஞர் சமூக அமைப்பு, ராக்கி சினிமாஸ் மற்றும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் உடன் இணைந்து ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது.

குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

இது தொடர்பாக ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறியதாவது, சென்னை, அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லம் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. 60 முதல் 90 வயதுகளைக் கடந்த 101 முதியவர்கள் அங்கு வசிக்கின்றனர். அவர்களின் தனிமைத் துயரை விரட்டி உறவுகளின் மீதான நம்பிக்கையுணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் ரெயின்ட்ராப்ஸ் அன்னையர் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு திரைப்படத்திற்கு செல்வதென்பது நம் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் முதியோர் இல்லங்களில் வசிக்கும் தாய்மார்களுக்கு அப்படி அல்ல. எனவே, ஒரு மாறுதலாக ஆனந்தம் இல்லத்தில் வசிக்கும் தாய்மார்களை படத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று ரெயின்ட்ராப்ஸ் கருதியது.

ஆனந்தம் இல்ல மூத்த தாய்மார்களிடம் கேட்ட போது பாகுபலி 2 படமே அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமாக இருந்தது. இதையடுத்து, வரும் மே 13-ந்தேதி சனிக்கிழமை அன்று ஆனந்தம் இல்லத்தில் வசிக்கும் மூத்த பெருமக்களை ஒரு நாள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதுடன் பாகுபலி 2 திரைப்படத்தைக் காண்பிக்கவும் ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முயற்சியில் பிரீத்தி கிச்சன் அப்பையன்சஸ் மற்றும் ராக்கி சினிமாஸ் ரெயின்ட்ராப்ஸ் உடன் கைகோர்த்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அன்னையர் தின கொண்டாட்டம் ஆனந்தம் இல்ல தாய்மார்களின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Mothers of Anandam Old-Age Home