ஆசாதிசாட்-2 | ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மாணவிகள் வடிவமைத்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று விண்ணில் வெற்றிகரமாக எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டை ஏவியது. அதில் இருந்த 3 செயற்கைக்கோள்களில் ஒன்று ஆசாதிசாட்-2. இது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மூலம் பயிற்சி பெற்ற மாணவிகள் இணைந்து உருவாக்கியது.
காஷ்மீர் முதல் குமரி வரையில் உள்ள 75 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளின் முயற்சியினால் ‘ஆசாதிசாட்-2’ சாட்டிலைட் வடிவமைக்கப்பட்டது. பெண் பிள்ளைகளை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட செய்ய வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இணைந்து முன்னெடுத்த முயற்சி இது.
மாணவ விஞ்ஞானிகள் வடிவமைத்த இந்த செயற்கைக்கோள் விண்ணில் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் LoRa (லாங் ரேஞ்ச்) மற்றும் அமெச்சூர் ரேடியோ கம்யூனிகேஷன் தொடர்பு திறன்களை வெளிப்படுத்துதல், விண்வெளியில் கதிர்வீச்சு அளவை அளவிடுதல் மற்றும் விரிவாக்கக்கூடிய செயற்கைக்கோள் கட்டமைப்பை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்வெளிக்கு ஜி20 லோகோவை தாங்கி சென்றுள்ளது இந்த செயற்கைக்கோள். தேசிய மாணவர் படையின் 75-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு என்சிசி பாடல் விண்வெளியில் பிளே செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.