ஏரியை சீரமைத்த அசோக் லேலாண்ட் நிறுவனம்

ஏரியை சீரமைத்த அசோக் லேலாண்ட் நிறுவனம்
Ashok Leyland helps transform Lake in Hosur

சென்னை, ஓசூர், மார்ச் 20:- 2018:- ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலாண்ட் நிறுவனம் ஓசூரில் உள்ள குமுதேபள்ளி ஏரியை சீரமைத்து அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்துள்ளது. ஓசூரில் உள்ள அசோக் லேலாண்ட் ஆலைக்கு அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், துணை ஆட்சியர் சந்திரகலா, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் மனித வளம், தொடர்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு பிரிவுத் தலைவர் என்.வி. பாலச்சந்தர், நிறுவனத்தின் திட்ட மற்றும் உற்பத்தி திட்டமிடுதல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பி. ஹரிஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு அம்சத்தின் ஒரு பகுதியாக அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்த ஏரி சீரமைப்புப் பணியை டிசம்பர் 2017-ல் எடுத்துக் கொண்டது. 3 மாதங்களுக்குள் ஏரியும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டு முழுவதும் சீரமைக்கப்பட்டு சுற்றியுள்ள மக்களுக்கு பலனளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. 4.5 ஹெக்டேர் பரப்பளவிலான பரந்து விரிந்த பரப்பைக் கொண்ட ஏரிப்பகுதியில் 60 லட்சம் கேஎல் கொள்ளளவு நீரைத் தேக்க முடியும். தற்போது அந்த பகுதி முழுவதும் தூய்மையாகவும் முழு கொள்ளளவுடன் கூடியதாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மழையின் மூலமாகவும் பொதுப் பணித்துறையின் பாசனக் கால்வாய்கள் மூலமாகவும் நீர் தேக்கப்படுகிறது. அ்நத நீர் பாசனத்துக்கும் மீன்பிடி உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இது போன்ற பகுதிகளில் இதுபோன்ற ஏரிகள் நல்ல நிலையில் இருப்பது உள்ளூர் மக்களின் தேவைக்கு பெரிதும் உதவும் என்பதுடன் அது அத்தியாவசியமும் ஆகும்.

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் மனித வள, தொடர்பியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுக்கான தலைவர் என்.வி. பாலசந்தர் கூறுகையில், “அசோக் லேலாண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் அசோக் லேலாண்ட் நிறுவனம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் இந்த ஏரி சீரமைப்புத் திட்டமும் ஒன்றாகும். நாங்கள் மேற்கொண்ட மற்ற திட்டங்களைக் காட்டிலும் இது நிலைத்துப் பயன்தரக் கூடிய திட்டம் என்று நாங்கள் கருதுகிறோம். பள்ளிக்கு வழி என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினோம். இந்தத் திட்டமும் நல்ல திட்டமாகும். அனைத்துத் திட்டங்களின் மூலமும் உள்ளூர் மக்களின் சூழலை மாற்றி அமைத்து நேர்மறையான நல்ல மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்துகிறோம். இது போன்ற முன்முயற்சிகள் எங்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதுடன் இந்த சமூகத்துக்கு நாங்கள் எதையாவது திருப்பிச் செலுத்தும் வாய்ப்பையும் கொடுக்கின்றன. எங்களது ஆலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இதுபோன்ற பல திட்டங்களை கையில் எடுத்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு மக்களின் வாழ்வின் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து அவர்களது சிறந்த வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தப் பாடுபடுவோம்.” என்றார்.

அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு ஏரிப்பகுதிக்கு அருகில் உள்ள சாலைப் பகுதிகளில் அடர்ந்த செடிகள் மண்டியிருந்தன. அது பெரிய அளவில் நீர் வருவதை அடைத்துக் கொண்டிருந்தது. மேலும் ஏரியில் களைச் செடிகள் படர்ந்து நீர் சேமிப்பையும் சுகாதாரத்தையும் பெரிதும் பாதித்தன. புதர்கள் அடர்ந்த அந்தப் பாதையை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் அச்சத்துடனும் பாதுகாப்பின்றியும் அந்த வழியில் சென்று வந்தனர்.

ஏரியையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கி மாசுகளையும் ஆக்கிரமிப்பையும் அகற்றி இப்பகுதியை அழகாக்கி சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சவாலான இப்பணியை அசோக் லேலாண்ட் கையில் எடுத்தது. மழை நீர் சேகரிப்புக்கான நீர்த்தேக்கமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது. அரசின் அனுமதியுடன் களைச் செடிகள் மற்றும் குப்பைகள் தற்போது அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. 3 அடி அளவுக்கு வேலி தடுப்பு அமைக்கப்பட்டு கரைப் பகுதியில் 400 மீட்டர் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாகச் சென்று வர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Ashok Leyland helps transform Lake in Hosur