புயலால் பாதிக்கப்பட்ட "அனைத்து பகுதிகளிலும் 5 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும்" திருவாரூர் ஆய்வின் போது முதலமைச்சர் பேட்டி

புயலால் பாதிக்கப்பட்ட "அனைத்து பகுதிகளிலும் 5 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும்" திருவாரூர் ஆய்வின் போது முதலமைச்சர் பேட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் "கஜா" புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், கூறுகையில், "இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து புயல் குறித்த தகவல் பெறப்பட்டவுடன், "கஜா", புயல் வருவதற்கு முன்பாகவே அதன் வேகத்தன்மையை அறிந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு முகாம்களில் சுமார் 82 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமரிடம் உடனடியாக மத்தியக்குழுவை தமிழகத்திற்கு அனுப்பி கஜா புயல் சேத விவரங்களை தெரிந்து, தேவையான நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். மத்திய அரசிடம் கோரப்பட்ட நிதி வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்", என்றார்.

5 நாட்களுக்குள் மின்சாரம்

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- 

கேள்வி:- புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வில் மக்களின் பிரதான கோரிக்கைகள் என்னவாக இருந்தது?

பதில்:- பெரும்பாலான மக்கள் விரைந்து மின்சார வசதி வழங்க வேண்டும் என்றனர். ஒருசில இடங்களில் குடிநீர் வசதிக்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. "கஜா" புயலால் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்திருகிறது. எனவே மின்கம்பங்கள் ஊன்ற தேவையான குழியை பறிக்க வேண்டும். நம்முடைய மின்சார ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களை ஊன்றி வருகின்றனர். 

கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், கேரளா, ஆந்திராவில் இருந்து மின் ஊழியர்களை வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 அல்லது 5 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிடும்.