ஆசிப் பிரியாணி பண மோசடி

ஆசிப் பிரியாணி பண மோசடி
Aasife Biriyani Financial Fraud Case

சென்னையில் உள்ள பிரபலமான ஆசிப் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஆசிப் அகமது. இவர் வடபழனி லட்சுமிபுரத்தை சேர்ந்த கோதண்டராமன் என்கிற பைனான்சியரிடமிருந்து தனது தொழிலை விரிவுபடுத்த 8 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். இதில் 3.50 கோடியை மட்டுமே திருப்பித்தந்த இவர், மீதிப்பணத்தை தாராமல் இழுத்தடித்தார்..

கடனை திருப்பி கேட்டதற்காக ஆத்திரமடைந்த ஆசிப் முகமது தனது இரண்டாவது மனைவியான நந்தினி மூலம் கூலிப்படை ஆட்களை ஏவிவிட்டு, ஆயுதங்களால் கோதண்டராமனை தாக்கவும் செய்துள்ளார். இதனால் கோதண்டராமன் பலத்த காயமடைந்தார்.. இதுகுறித்து கோதண்டராமன் புகார் அளித்ததை தொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் கடந்த ஜனவரி-6ஆம் தேதி ஆசிப் முகமது மீது வழக்கு பதிவு செய்தனர்..

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் கோதண்டராமன் பண மோசடி செய்துவிட்டார் என ஆசிப் அகமது போலீஸில் புகார் செய்யவே தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த ஆசிப் அகமதுவும் நந்தினியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரியில் கோதண்டராமன் தாக்கப்பட்ட வழக்கு நேற்று சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக புழல் சிறை போலீசார் ஆசிப் அகமதுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் நவ-17க்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். ஆசிப் அகமது மீண்டும் புழல் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து பைனான்சியர் கோதண்டராமன் கூறுகையில், “நான் ஆசிப் அகமதுவுக்கு கொடுத்த பணம் அனைத்தும் எனது வங்கிக்கணக்கில் இருந்து முறையாக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நியாயமான வட்டியையே அவரிடம் கேட்டேன்.. அவரது ஆசிப் பிரியாணி நிறுவனத்தின் 14 கிளைகளில் தினசரி சுமார் பத்துலட்சம் வரை வருமானம் வருகிறது. அவர் நினைத்திருந்தால் பணத்தை திருப்பி கொடுத்திருக்க முடியும்.. ஆனால் பணத்தை திருப்பி தராததோடு, அதற்கு பதிலாக ஆள் வைத்து தாக்கவும் முயற்சி செய்தார்.

அதனால் தான் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தேன்.. போலீசாரும் நீதிமன்றமும் என்னுடைய பணத்தை எனக்கு திரும்பவும் பெற்று தருவார்கள் என நம்புகிறேன்.. மேலும், எனக்கு தொடர்ந்து மிரட்டல் போன் கால்கள் வருகின்றன.. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கோ எனது குடும்பத்திற்கோ ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆசிப் அகமதுவும் அவரது குடும்பத்தினருமே பொறுப்பு.. காவல்துறையிடம் எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்” என கூறினார் கோதண்டராமன்.

Aasife Biriyani Financial Fraud Case