புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக வன்மம்;   தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக வன்மம்;   தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக வன்மம்;   தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக வன்மம்;   தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் , ‘அனைத்துலகத் தமிழர் கல்விப் பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

ஈழத்தின் பூர்வக்குடிகள் தமிழர்கள் இல்லை எனவும், தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களைத் துன்புறுத்தினர் எனவும், தமிழர்கள் போராடியதால்தான் கொல்லப்பட்டனர் எனவும் கற்பனைகளை உருவாக்கி,  பொய்களை பாடமாக்கியுள்ளனர்.

 தமிழர் இன வரலாற்றை மாற்ற முனையும் இத்தகைய வன்மச் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. 

யாழ் நூலகம் சிங்களர்களால் எரியூட்டப்படவில்லையெனவும், தமிழக மன்னர்கள் படையெடுத்த பின்புதான், தமிழர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர் எனவும், சிங்களர்களின் வருகைக்குப் பிறகே, இலங்கையின் வரலாறு தொடங்குகிறது எனவும், கற்பனையாகச் சித்தரிக்கப்பட்டு, ஈழ வரலாறே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறொரு கோணத்தில் எழுதப்பட்டிருப்பது உலகத் தமிழர்களை உள்ளம் கொதிக்கச் செய்கிறது.

இலங்கை அரசின் பாடப் புத்தகங்களே தமிழர்களின் சமயத்தை சைவம் எனக் குறிப்பிடும்போது, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இப் பாட நூல்களில் தமிழர்களை, ‘இந்துக்கள்’ எனக் குறிப்பதன் மூலம் , சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய இனப் படுகொலையை பௌத்த மதத்தினருக்கும், இந்து மதத்தினருக்குமான மத மோதலாக சுருக்கி காட்ட முனையும் சூழ்ச்சி அம்பலமாகிறது. 

இவ்வாறு தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக் கூறி, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்குத் தவறாகக் கற்பிப்பதன் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தி, அவர்களது தாயகப் பற்றையும், இன உணர்வையும் மழுங்கடிக்கச் செய்யும் வஞ்சகச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பது தெளிவாகிறது.

உலகின் மூத்த தொல்குடி சமூகமான தமிழினத்தின் பழம் பெருமையையும், பெரும் புகழையும் பறைசாற்ற வரலாற்றுச் சான்றுகள் இல்லாது இலக்கியச் சான்றுகளே தரவுகளாக இருப்பது எந்தவொரு இனத்திற்கும் நேர்ந்திடக் கூடாப் பெருந் துயரமாகும்.

 இத்தகைய துயர்மிகு நிலையில், ‘வரலாற்றில் அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே படைப்பார்கள்’ எனும் அண்ணல் அம்பேத்கரின் முதுமொழிக்கேற்ப, தமிழர்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி, 

இன ஓர்மையடைந்து மீளெழுச்சி கொள்வதற்கும், இழந்தத் தாயகத்தை போராடி மீட்டெடுப்பதற்குமாக வருங்கால தமிழ்த் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதென்பது தலையாயக் கடமையாகும். 

அதனைத் தகர்த்து முறியடிக்கும் வகையில் நடைபெறும் இத்தகைய ஈனச் செயல்கள் பெருஞ் சினத்தைத் தருகிறது.

ஆகவே, புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக ஒரு சில அமைப்புகளால் பாடநூல்கள் எனும் பெயரில் திட்டமிட்டு செய்யப்படும் அவதூறு பரப்புரைகளையும், உள் நோக்கத்துடனான பொய்யுரைகளையும் தடுத்து முறியடித்து, தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலைநிறுத்த துணை நிற்க வேண்டுமென உலகத் தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி