ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: 17 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்:  17 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை

ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக பெண் தரகர் அமுதா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், செவிலியர் பர்வீன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அமுதாவிடம் இருந்து 2 குழந்தைகளை வாங்கியதாக செவிலியர் பர்வீனும், 4 குழந்தைகளை விற்றதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனும் திடுக்கிடும் தகவல்களை 
வெளியிட்டனர். 

இந்நிலையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் தலைமையில் மொத்தம் 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4 ஆயிரத்து 800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்களும், கொல்லிமலை பகுதியில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய 4 குழுக்களும், வீட்டில் பிரசவித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் குறித்து சோதனை நடத்த 3 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அமுதா 70 ஆயிரம் ரூபாய்க்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.