இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து தகுதிச்சுற்றில்

இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து தகுதிச்சுற்றில்
இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து தகுதிச்சுற்றில்

மஸ்கட்: உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்திய அணி, ஓமனை சந்திக்கிறது.

கத்தாரில் வரும் 2022ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கான இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பங்கேற்கின்றன. இந்திய அணி, 'இ' பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.

இப்பிரிவில் உள்ள கத்தார், தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனால் 2வது இடம் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும். தற்போது ஓமன் (9), ஆப்கானிஸ்தான் (4) அணிகள் 2, 3 வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை மோதிய 4 போட்டிகளில் 3 'டிரா', 1 தோல்வியுடன் 3 புள்ளிகள் மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அடுத்து நான்கு போட்டிகளில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும். இந்நிலையில் இந்திய அணி இன்று வலிமையான ஓமனை, அதன் சொந்தமண்ணில் சந்திக்கிறது. இரு அணிகள் முதலில் மோதிய போட்டியில் சுனில் செத்ரி அடித்த கோல் காரணமாக போட்டியின் 88 வது நிமிடம் வரை இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

கடைசி 8 நிமிடத்தில் 2 கோல் அடிக்கவிட, இந்தியா தோற்றது. பின் 'ஆசிய சாம்பியன்' கத்தாருக்கு எதிராக துணிச்சலாக 'டிரா' செய்த இந்தியா, அடுத்து வங்கதேசம், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி நேரத்தில் கோல் அடித்து, தட்டுத்தடுமாறி 'டிரா' செய்தது.

இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. ஒருவேளை தோற்றால் 2022 உலக கோப்பை கால்பந்து தொடருக்கு செல்வதற்கான வாய்ப்பு முடிந்து விடும். சுனில் செத்ரியை மட்டும் நம்பியிருக்காமல் மற்ற வீரர்களும் சரியான முறையில் 'பினிஷிங்' செய்து கோல் அடித்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.