ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி...

 ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி...

வங்கதேச அணிக்கு எதிராக நடைப்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணி எதிர்பாராவிதமாக வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஜ்காட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறியது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக மொஹம் நாயிம் 36(31) ரன்கள் குவித்தார். சொம்யா சர்கார் 30(20), மொஹமதுல்லா 30(21) ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கிய ரோகித் ஷர்மா அதிரடியாக விளையடி 85(43) ரன்கள் குவித்தார்.. இவருக்கு துணையாக ஷிகர் தவான் 31(27) ரன்கள் குவித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் 15.4-வது பந்தில் 154 ரன்களை இந்தியா எட்டியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் விளையாடிய தனது 100-வது சர்வதேச டி20 பிரவேசத்தை பதிவு செய்த ரோகித் ஷர்மா, 100 டி20 போட்டிகளை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெறும் இறுதி மற்றும் மூன்றாம் டி20 போட்டி வரும் நவம்பர் 10-ஆம் தேதி நாப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.