மேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ராஜசாகர் மற்றும் கபிணி அணை ஏற்கனவே நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நேற்று 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், இரு கரைகளையும் அணைத்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 38 மதகுகள் வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணைக்கு 33 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.