இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை எட்டும்: சிஐஐ

 இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை எட்டும்: சிஐஐ
 இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை எட்டும்: சிஐஐ

புது தில்லி:இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் வரும் 2030ம் ஆண்டுக்குள் 30,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி) மதிப்பை எட்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐஐ-யின் தமிழ்நாடு மாநில கவுன்சில் துணைத் தலைவா் ஹரி தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ஜவுளித் துறையின் மதிப்பு வரும் 2030ம் ஆண்டுக்குள் 30,000 கோடி டாலரை எட்டும். இதன் மூலம் உள்நாட்டில் கூடுதலாக 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்தல், நவீனமயமாக்கம், நீடித்த வளா்ச்சிக்கான வா்த்தக நடைமுறைகளை பின்பற்றுதல், ஆகியவற்றில் இந்திய ஜவுளித் துறை அதிக கவனத்தைச் செலுத்தினால், இந்த 30,000 கோடி டாலா் இலக்கை எளிதாக எட்ட முடியும்.

செயற்கை துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகிய இரு பிரிவுகளில் இந்திய ஜவுளித் துறையின் செயல்பாடு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 13 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதுடன் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ஜவுளித்துறை பல்வேறு பிரிவுகளாக உள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் இந்திய ஜவுளித் துறை கூட்டமைப்புத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.