கேப்டவுனாக மாறப் போகிறது சென்னை.. ஒரு சொட்டு நீருக்காக அலைய நேரிடும்.. அமைச்சர் எச்சரிக்கை!
டெல்லி: சென்னையும், பெங்களூர் நகரமும் கேப்டவுன் போல மாறும் அபாயம் நெருங்கி வருகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலைக்கு இரு நகரங்களும் மாறப் போகின்றன என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் இப்படிக் கூறினார் ஷெகாவத். அமைச்சர் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த கோடை காலத்தின்போது சென்னை மக்கள் தண்ணீருக்காக பட்ட கஷ்டத்தை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது மழைக்காலம் வந்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் தண்ணீரை சேமித்து வைக்கும் வழிகளை மக்கள் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் அமைச்சரின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
சேமிப்பு: அமைச்சர் ஷெகாவத் கூறுகையில், "மக்களுக்கு இன்னும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து புரியவில்லை. உணராமல் உள்ளனர். இந்தியாவின் பெருமளவிலான மக்கள் தண்ணீர்ப் பஞ்சாயத்தை நோக்கி நெருங்கி வருகின்றனர். கேப்டவுன் சென்னையும், பெங்களூரும் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போல பொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நகரங்களாக மாறப் போகின்றன. இது மிகவும் வேகமாக நடக்கப் போகிறது. கடந்த 2017-18ல் கேப்டவுன் நகரில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாத நிலை உருவானது. அதன் பின்னர் மக்கள் சுதாரித்தனர். பகல் முழுவதும் குழாய்களைப் பயன்படுத்தாமல் இருந்து தண்ணீரை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
நிலத்தடி நீர்: வேகமாக நடந்து வரும் நகரமயமாக்கல்தான் தண்ணீ பிரச்சினைக்கு முக்கியக் காரணம். மக்கள் தொகைப் பெருக்கம், மோசமான நீர் நிர்வாகம் ஆகியவைதான் தண்ணீப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணங்கள். நிலத்தடி நீர் வேகமாக இறங்கி வருகிறது. ஏரிகள் வறண்டு போய் வருகின்றன.
அசுத்த ஆறுகள்: சென்னை, பெங்களூர் மக்கள் உடனடியாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய அபாயத்தை அவர்கள் சந்திக்க நேரிடும். இந்தியாவில் ஆறுகளை புனிதமாக கருதுகிறோம், மதிக்கிறோம்,வணங்குகிறோம். ஆனால் நமது ஆறுகள் அனைத்துமே அசுத்தமாகவே உள்ளன. ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகிறோம். இப்படி இருந்தால் நீர் நிலைகளை நாம் எப்படி பாதுகாக்க முடியும். மக்கள் இதை உணர வேண்டும் என்றார் ஷெகாவத்.