சொல்லிவிடவா- சினிமா விமர்சனம்

சொல்லிவிடவா- சினிமா விமர்சனம்
Sollividava Tamil Movie Review

தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கி இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான அர்ஜுன். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் அர்ஜுன்.

அர்ஜுன். தனக்கே உரிய தேசப்பற்றை இப்படத்திலும் காண்பித்திருப்பது சிறப்பு.

நாயகன் சந்தன் குமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ் மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு, போண்டா மணி..ஆகியோர் இருக்கிறார்கள்.

தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு சுஹாசினி பாதுகாவலராக இருந்து வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கார்கிலில் போர் நடக்கிறது. இந்த போரை நேரில் படம் பிடிப்பதற்காக அவர்கள் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்த சதீஷ், பிளாக் பாண்டி, யோகி பாபு, போண்டா மணி ஆகியோர் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். அதே சமயம், சந்தன் குமாரின் கேமராவும் உடைந்து விடுகிறது. இந்நிலையில், ஒரு கேமராவை வைத்து இருவரும் மாறி மாறி வேலை பார்க்கலாம் என்று சந்தன் குமாரும் ,ஐஸ்வர்யாவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள்.

கார்கில் போரை படம் பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் மலர்கிறது. இறுதியில் கார்கில் போரை இருவரும் படம் பிடித்தார்களா? காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுஹாசினியின் மகனுடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தின் நாயகனாக சந்தன் குமார் நடித்திருக்கிறார். புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த உடற்கட்டோடு நாயகனுக்கான அந்தஸ்தோடு இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அழகாக வந்து துறுதுறுப்பான...துடிப்பான நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். முந்தைய படத்தை விட இப்போது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அவருடைய நடனம் ரசிக்க வைக்கிறது.

நாயகனின் தந்தையாக வரும் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி,போண்டா மணி சுஹாசினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

போர்க்களத்தில் நாயகன்-நாயகிக்கு உதவியாக ராணுவ வீரர் ஓ.ஏ கே.சுந்தர் வருகிறார். மிடுக்கான ராணுவ வீரர் வேடம் அவருக்குப் பொருந்தியிருக்கிறது. அவருடைய திறமைக்கும் நடிப்பிற்கும் இயக்குநர் சரியான தீனி போடவில்லை என்று தான் சொல்லவேண்டும். தாத்தா கே.விஸ்வநாதன் பேத்தி மீது காட்டும் பாசப்பொழிவான நடிப்பும் வசனங்களும் அற்புதம். பிரகாஷ்ராஜ் ஒரு காட்சில் தோன்றினாலும் கண்களை குளமாக்கிவிடுகிறார். ஜெஸ்சி கிப்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். வேணுகோபாலின் ஒளிப்பதிவில் போர்க்களக்காட்சிகள் வெகு ஜோர். .மொத்தத்தில் ‘சொல்லிவிடவா’படம் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது.

Sollividava Tamil Movie Review