நிமிர்- சினிமா விமர்சனம்

நிமிர்- சினிமா விமர்சனம்
Nimir Movie Review

மலையாளத்தில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை கொண்டுவந்து மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் பிரியதர்ஷன். அவரது இயக்கமும், அதற்கேற்ற திரைக்கதையும் யதார்த்தமாக வந்திருப்பது படத்திற்கு பலம்.

போட்டோகிராபர் உதயநிதி தனது அப்பாவான மகேந்திரனின் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். அவரது ஸ்டூடியோவுக்கு அடுத்ததாக போட்டோ லேமினேஷன் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரிடம் வேலைக்கு சேர்கிறார் கருணாகரன். உதயநிதியும், அவரது தோழியுமான பார்வதி நாயரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பார்வதி நாயர் உயர் படிப்புக்காக வெளியூருக்கு செல்கிறார்.

ஒருநாள் எம்.எஸ்.பாஸ்கருக்கும், ஆட்டோ டிரைவரான செண்ட்ராயனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் செண்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கரை அடிக்கிறார். இதை பார்க்கும் கருணாகரன், செண்ட்ராயனுடன் சண்டைக்கு செல்கிறார். இவர்களது சண்டையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் உதயநிதி ஈடுபட, திடும் பிரவேசம் வரும் சமுத்திரக்கனி அவர்களை அடித்துவிடுகிறார்.

பிரச்னையை தடுக்க சென்ற தன்னை அடித்த சமுத்திரக்கனியை, உதயநிதி அடிக்க செல்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் சமுத்திரக்கனியிடம் அடிவாங்குகிறார். பொதுஇடத்தில் அனைவரது முன்பும் அடிவாங்கி அவமானப்பட்டதால், சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும்வரை தான் செருப்பே அணிய மாட்டேன் என்றும் சபதம் செய்கிறார் உதயநிதி. பின்னர் சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து, சமுத்திரக்கனியை அடிக்க செல்கிறார். ஆனால் சமுத்திரக்கனி அவரது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்.

இதற்கிடையே பார்வதி நாயருக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது. இதனால், மனம் உடைந்து போகிறார் உதயநிதி. இந்நிலையில், அவரது போட்டோ ஸ்டூடியோவுக்கு வருகிறார் நமீதா பிரமோத். பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் உதயநிதி, தனது அண்ணனை அடிக்க சபதம் செய்திருக்கிறார் என்பது நமீதா பிரமோத்துக்கு தெரிய வருகிறது. இதையடுத்து அவரது சபதத்தை கைவிடும்படி நமீதா கேட்க, அவரது பேச்சை உதயநிதி கேட்டாரா? சமுத்திரக்கனியை அடித்து தனது சபதத்தை நிறைவேற்றினாரா? நமீதா பிரமோத்தை திருமணம் செய்தாரா? அவரது வாழ்க்கையில் நடந்த திருப்பம் என்ன? என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை.

உதயநிதி ஸ்டாலின் எந்த வித அலட்டலுமின்றி ஒரு சாதாரண இளைஞனாக வந்து செல்கிறார். அவரது மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். மனிதன் படத்திற்கு பிறகு நிமிர் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தரும். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நமீதா பிரமோத் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மனதில் பதியும்படி வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பார்வதி நாயர் வழக்கம்போல் அவரது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் மகேந்திரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு வலுசேர்க்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக மகேந்திரனுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், அமைதியாக அவரது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாகரன் அவ்வப்போது காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்துகிறார். இமான் அண்ணாச்சியின் தென்னந்தோப்பை யார் கவனித்துக் கொள்வது என்கிற பிரச்சினையில் அருள்தாஸ் செய்யும் பஞ்சாயத்தும் அதைத் தொடர்ந்து நடக்கும் அக்கப்போர்களும் காமெடி கலாட்டா..!

கிராமத்தின் அழகையும், தாமிரபரணி ஆற்றின் பல்வேறு வடிவங்களையும், தெருக்களின் பிரம்மாண்டத்துடன் வீடுகளின் உள்ளடக்கத்தையும் சேர்த்தே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.ஏகாம்பரம். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் தாமரையின் வரிகளில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்.

மொத்தத்தில் `நிமிர்' நிமிர்ந்து பார்க்கலாம்..

Nimir Movie Review