ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்
சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது.
அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் ஜி.வி;பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.
'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.
எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.
இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி, தனது கலை மூலமாக சர்வதேச அளவில் தனது ரசிகர்களிடம் தனக்கான ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.
அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ்.