தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழார

தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழார

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில்,‘2002 ஆம் ஆண்டில் டைரக்டர் ஹரி இயக்கிய முதல் திரைப்படமாக ‘தமிழ்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான், இயக்குநர் பாலசந்தர், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி ஆகியோர் ஒன்று கூடி விவாதித்து, அடுத்த படத்தை இயக்குவதற்கு இயக்குநர் ஹரிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தீர்மானித்து சாமி பட வாய்ப்பை வழங்கினோம். அதை உணர்ந்து, கூடுதலாக உழைத்து வெற்றியைக் கொடுத்தார். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பி வாசு, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. அதனை இன்று வரை காப்பாற்றி வருகிறார்.’ என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில்,‘ எங்கள் கம்பெனியில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கு அசுரத்தனமாக உழைப்பவர். அதற்கேற்ப வெற்றியையும் கொடுப்பவர். ‘சேது ’படத்திலிருந்து விக்ரம் அவர்களுடன் பாலா சார் மூலமாக எனக்கு ஒரு தொடர்பு உண்டு. நாம் மிகவும் நேசித்த கமர்சியல் படங்களில் சாமியும் ஒன்று. அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாவதில் சந்தோஷம். இதுபோன்ற மாஸ் படத்திற்காக அவருடைய ரசிகர்களுடன் நானும் காத்திருக்கிறேன்.’ என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,‘ இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமான விசயமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின் போது வைட் ஷாட், குளோஸ் ஷாட் என்பதைப் போல் ‘ஹரி சார் ஷாட் ’என்று ஒரு விசயத்தைப் பற்றி பேசுகிறார்கள். டைரக்டர் ஹரி சாரோட பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ஹிந்தி நடிகர்களும் தொற்றிக்கொண்டதை நான் உடனிருந்து கவனித்து சந்தோஷப்பட்டேன். அன்பு தங்கச்சி கீர்த்திசுரேஷ், படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் ‘அண்ணே இப்படியொரு பஞ்ச்ச இந்த இடத்தில போடுங்க..’ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்துவிட்டார்.’ என்றார்.

நடிகர் பிரபு பேசுகையில்,‘அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.’ என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில்.‘ இயக்குநர் ஹரி அவர்கள் இயக்கிய முதல் படமான தமிழ் படத்திலிருந்து தற்போது இந்த சாமி ஸ்கொயர் வரைக்கும் அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறேன். அவர் முதல் படத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வேலை பார்த்து வருவதை உடனிருந்து பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு பாடல்வரிகளையும் செதுக்கி செதுக்கி தேர்ந்தெடுப்பார். அவருடைய படத்திற்கு பாடல் எழுதுவது என்னைப் பொறுத்தவரை ஒரு பயிற்சி பெறுவது போலிருக்கும்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த அனைத்து தமிழ் படங்களிலும் நான் பாடல்களை எழுதியிருக்கிறேன். விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ என்ற படத்திற்கு பாடல் எழுதியதன் மூலம் தான் எனக்கு முதன்முதலில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இந்த படத்தில் ‘நீ தான் ஆணின் இலக்கணம். உன் அருகே இருந்தால் எங்களுக்கு வருமே தலைக்கனம்...’ என்று பாடல்வரிகளை விக்ரமிற்காகவே எழுதினேன். இந்த படத்தில் ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் எழுதியிருக்கிறார்.’ என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,‘ இந்த படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்க தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்தி